Education | Discipline | Purity

Battle of the Golds

000

Day

:

00

Hrs

:

00

Min

:

00

Sec

Founders

திரு.க.வல்லிபுரம்பிள்ளை முதலியார்

இந்த முகாமையாளர் சபையின் தலைவராக திரு.க.வல்லிபுரம்பிள்ளை முதலியார் அவர்கள் கடமையாற்றியுள்ளார். இவர் முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்டவர் எனக் கூறப்படுகின்றது. இவர் உள்ளூர் சபையின் (Local Board) செயலாளராக கடமையாற்றியிருக்கின்றார். இவரது தந்தையார் கனகசிங்க முதலியார் ஆவார். இலங்கை சட்டவாக்க சபையின் திருக்கோணமலைத் தொகுதியின் பிரதிநிதியாக (1924-1930) தெரிவு செய்யப்பட்டவரும். இலங்கையின் முதலாவது அரச சபைக்கு (State Council -1931-1935) திருக்கோணமலை – மட்டக்களப்பு தொகுதியின் பிரதிநிதியாக தெரிவு செய்யபட்டவருமான திரு.எம்.எம்.சுப்ரமணியம் அவர்கள் திரு.க.வல்லிபுரம்பிள்ளை முதலியார் அவர்களின் சகோதரியான அழகம்மா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். திரு.எம்.எம்.சுப்ரமணியம் அவர்களும் முதலியார் பரம்பரையைச் சேர்ந்தவரே. மயில்வாகன முதலியார் சுப்ரமணியம் என்பது இவரது முழுமையான பெயராகும். திரு.எம்.எம்.சுப்ரமணியம் அவர்களின் ஒரு மகனாகிய திரு.சு.அழகுராஜா அவர்களின் மகனாகிய திரு.அ.சிவலோகநாதன் அவர்கள் பின்னாட்களில் (1978-1989) இராமகிருஷ்ண மிஷன் இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திரு.எம்.எம்.சுப்ரமணியம் அவர்கள் வில்லூன்றி கந்தசுவாமி கோவில். வீரகத்திப் பிள்ளையார் கோவில் ஆகியவற்றின் அறங்காவலர் சபையின் முகாமையாளராக பணி செய்துள்ளார். அத்துடன் தனக்குச் சொந்தமான காணிகள் பலவற்றை கோவில்களுக்கு வழங்கியுள்ளார் என்பதுடன் திருக்கோணமலை இந்து மயானத்திற்கான காணியையும் இவரே வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். திரு.க.வல்லிபுரம்பிள்ளை முதலியார் அவர்களுக்கு மயில்வாகனம். குமாரசாமி ஆகிய இரு மகன்மாரும் சிவபாக்கிய சவுந்தரம்மா. தங்கநாச்சியார். சவுந்தரநாயகி அழகுபாக்கியம் ஆகிய மூன்று மகள்மாரும் இருந்தார்கள். இவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இந்துக் கல்லூரியில் கற்றிருக்கின்றனர். திரு.க.வல்லிபுரம் பிள்ளை முதலியாரின் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த சிலரும் இப்பொழுதும் கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

வழக்கறிஞர் ச.விஸ்வலிங்கம்

இந்த முகாமையாளர் சபையிலே இடம்பெற்றிருந்த இன்னுமொரு முக்கியமான உறுப்பினர் வழக்கறிஞர் விஸ்வலிங்கம் அவர்கள் ஆவர். இவருடைய தந்தையார் திரு.சரவணமுத்து, தாயார் திருமதி.அழகம்மா ஆவர். திருக்கோணமலை பிரதான வீதியில் ‘லிங்கவிலா’ என்ற வீட்டிலே இவர் வாழ்ந்தார். இவருக்கு கனகசபாபதி (பொதுச்சுகாதார பரிசோதகர்). பாக்கியதுரை (வழக்கறிஞர்). இராஜதுரை (நீதிமன்ற பிஸ்கால்). சிவானந்தம் (காசாளர். நகரசபை). ஜெகதீசன் ஆகிய ஐந்து மகன்மாரும். தையல்நாயகி. விசாலாட்சி நேசரத்தினம். சிவபாக்கியம், மகேஸ்வரி ஆகிய நான்கு மகள்மாரும் இருந்தனர்.

இப்போதைய சட்டமா அதிபர் திரு. சஞ்சே இராஜரெட்ணம் அவர்களின் பேரனார் பிரபல வழக்கறிஞர் திரு.டி. இராஜரெட்ணம் அவர்கள் திருக்கோணமலை நகரசபையின் முதலாவது தலைவராக 1940 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். திரு.டி.இராஜரெட்ணம் அவர்களின் தாயார் திருமதி. துரையப்பா வன்னியனார் அவர்களும், மனைவியின் தந்தையார் நொத்தாரிசு நடராஜபிள்ளை அவர்களும் வழக்கறிஞர் விஸ்வலிங்கம் அவர்களின் சகோதர சகோதரிகள் ஆவர்.

1897 இல் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோது வழக்கறிஞர் விஸ்வலிங்கம் அவர்கள் ஒரு பகுதி காணியை வழங்கியதாகவும் ஒரு கட்டிடத்தை அமைத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்து மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை புகட்டும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கரிசனை கொண்டவராக வழக்கறிஞர் விஸ்வலிங்கம் அவர்கள் இருந்தார்கள்.

வைத்தியர் திரு. க. அருணாசலம்

திரு.க.அருணாசலம் அவர்களது தந்தை திரு.கதிரேசு ஆவார். இவரது குடும்பம் தற்போதைய இராஜவரோதயம் வீதி 56ம் இலக்க இல்லத்தில் வாழ்ந்து வந்தது. திரு.க.அருணாசலம் அவர்கள் தொழில் முறையில் ஒரு ஆயுள்வேத வைத்தியர் ஆவார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். மூத்த மகள் திரு. ஏரம்பு அவர்களையும். இரண்டாவது மகள் திரு.அருணாசலம் அவர்களையும், அடுத்த மகள் திரு.சிவகுருநாதன் அவர்களையும் திருமணம் செய்தனர். மூத்த மகன் திரு.சந்திரசேகரம். இளைய மகன் திரு.சிவபாதசுந்தரம் ஆவர்.

மூத்த மகன் திரு.சந்திரசேகரம் அவர்கள் இந்துக் கல்லூரியின் ஒரு புகழ்பூத்த மாணவராவார். இவர் ஆரம்ப. இடைநிலைக் கல்வியை இந்துக் கல்லூரியில் கற்று (1921 1931). கேம்பிரிட்ஜ் சீனியர் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் இலண்டன் பல்கலைக் கழக வெளிவாரி மாணவனாக இணைந்து பட்டப் படிப்பை மேற்கொண்டு 1937ம் ஆண்டில் திருக்கோணமலை மாவட்டத்தின் முதலாவது விஞ்ஞானப் பட்டதாரியாக தேறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் இந்துக்கல்லூரியிலேயே ஆசிரியராக நியமனம் பெற்றுக் கடமையாற்றி 1944 இல் பாடசாலைப் பரிசோதகர் நியமனம் பெற்று. படிப்படியாக உயர்ந்து 1966 இல் பிரதம கல்வி அதிகாரியாகினார்.

திரு.க.அருணாசலம் அவர்கள் முகாமையாளர் சபையிலிருந்து பணியாற்றியதோடு சமூக சேவைகள் பலவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். 20.10.1939ம் திகதிய இலங்கை அரசாங்க வர்த்தமானியில் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை மாவட்டத்திற்குரிய தழிழ்ப்பேசும் நீதிமன்ற யூரர்களுக்கான பட்டியலில் திரு.க.அருணாசலம் அவர்களது பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதை காணமுடிகிறது.

திரு.எஸ்.சுப்ரமணியம் (சிறாப்பர்)

திரு.எஸ்.சுப்ரமணியம் அவர்கள் திருக்கோணமலை கச்சேரியில் சிறாப்பராகக் கடமையாற்றியவர் ஆவார். இவருக்கு ஞானகணேசன். இராஜநாதன். முருகையா ஆகிய மகன்மார் இருந்தனர். இவர்களில் இளைய மகன் முருகையா சிறந்த உதைபந்தாட்ட வீரனாக இருந்தார். இள வயதிலேயே அவர் காலமாகிவிட்டார். மூத்த மகன் திரு.சு.ஞானகணேசன் அவர்களுக்கு சுப்ரமணியம், சுவாமிநாதன் ஆகிய மகன்மாரும். தையல்நாயகி. சீமந்தினி. தர்மசம் வத்தனி ஆகிய மகள்மாரும் இருந்தனர். இவர்களில் தையல்நாயகி அவர்களுடைய கணவர் திரு.ஏ.ஏ.ஜெயரெட்ணம் அவர்கள் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளராகவும் 1987 1992 காலப்பகுதியில் கடமையாற்றியிருந்தார். இவருடைய மகன்மார். மருமகன் ஆகியோரும் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களே.

திரு.சு.ஞானகணேசன் அவர்களது மகன்களாகிய திரு.சுப்ரமணியம். திரு.சுவாமிநாதன் ஆகியோரும் இந்துக் கல்லூரியிலேயே கற்றார்கள். திரு.எஸ்.சுப்ரமணியம் (சிறாப்பர்) அவர்களது இன்னொரு மகனாகிய திரு.இராஜநாதன் அவர்களுக்கு மகேந்திரன். லோகேந்திரன். ரவீந்திரவர்மன் ஆகிய மகன்களும் குமுதரஞ்சனி. ஸ்ரீரஞ்சனி ஆகிய மகள்களும் இருந்தனர். மகன்கள் மூவரும் இந்துக் கல்லூரியிலேயே கற்றனர். அவர்களில் ஒருவராகிய திரு.ரவீந்திரவர்மன் அவர்கள் இந்துக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க கிளையின் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

திரு.எஸ்.சுப்ரமணியம் (சிறாப்பர்) அவர்களின் துணைவியார் திருமதி.தையல்நாயகி அவர்கள் திருக்கோணமலைத் தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் சகோதரியாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் வித்தியாலயம் வீதியிலுள்ள ‘றோஸ்பீல்ட்’ என்ற வீட்டிலேயே வாழ்ந்து வந்தனர். இதே வீட்டில்தான் பின்னாட்களில் சுவாமி விபுலாநந்தர் அவர்களும் வாழ்ந்திருந்தார். 1924ம் ஆண்டின் பிற்பகுதியில் திருக்கோணமலைக்கு வருகைதந்த சுவாமி விபுலாநந்தர் அவர்கள் ‘றோஸ்பீல்ட்’ என்று அழைக்கப்படும் இந்த வீட்டில்தான் 1925 ம் ஆண்டில் ஆச்சிரமத்தை அமைத்து இராமகிருஷ்ண மிஷன் நடவடிக்கைகளுக்கான நிலையமாக செயற்படுத்தி வந்தார்.

திரு.இ.முருகுப்பிள்ளை (நில அளவையாளர்)

முகாமையாளர் சபையின் பிற்பட்ட காலத்தில் ஒருவராகவிருந்து திரு.இ.முருகுப்பிள்ளை அவர்கள் பணிபுரிந்துள்ளார். திரு.இராமலிங்கம் அவர்களின் மகனாக திருக்கோணமலையில் 1893 இல் இவர் பிறந்தார். அரசாங்க நில அளவையாளராக கடமையாற்றினார். தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்துக்குரிய காணிகள் எல்லாவற்றையும் இலவசமாக நில அளவீடு செய்து கொடுத்தார். அத்துடன் தமிழ் பல்கலைக் கழக இயக்கத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இருந்தார். இவர் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை புனருத்தாரணம் செய்து 1963ம் ஆண்டில் கும்பாபிஷேகத்தை நடாத்தி வைக்கும் கைங்கரியத்தில் மிகக் கரிசனையோடு ஈடுபட்டு பணியாற்றியிருந்தார். 1930 ம் ஆண்டிலேயே இராமகிருஷ்ண மிஷன் செயற்குழுவில் உறுப்பினராகச் சேர்ந்து பல ஆண்டுகள் தொண்டாற்றினார். மிஷன் சிறந்த முறையில் இயங்குவதற்கு பெரிதும் உதவினார்.

19ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் (1897) தொடங்கப்பட்ட இக்கல்லூரியின் முகாமையாளர் குழுவில் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஒரு இளைய உறுப்பினராக இணைந்து திரு.இ.முருகுப்பிள்ளை அவர்கள் பணியாற்றியிருக்கின்றார். கோவில்கள். பாடசாலைகள். சமய நிறுவனங்கள் என்பவற்றின் சீரான இயக்கம் தொடர்பான அக்கறையைக் கொண்டவராக இவர் இருந்தார். 1925 இல் பாடசாலையை இராமகிருஷ்ண மிஷன் கையேற்ற பின்னரும் பாடசாலையின் வளர்ச்சிக்காக சுவாமி விபுலாநந்தருக்கு துணையாக நின்று செயலாற்றியுள்ளார். இவர் திருக்கோணமலை ஸ்ரீ சண்முக வித்தியாலயத்தின் முகாமைக் குழுவிலும் இருந்து பணியாற்றியுள்ளதாக சில குறிப்புகளிலிருந்து அறிய முடிகின்றது.

வைத்தியர் கனகசபாபதி அவர்களின் மூத்த மகள் அன்னம்மா அவர்களை திரு.இ.முருகுப்பிள்ளை அவர்கள் திருமணம் செய்திருந்தார். மனைவியின் மறைவுக்குப் பின்னர் மனைவியின் இளைய சகோதரி கமலநாயகி அவர்களை திருமணம் செய்தார். திரு.இ.முருகுப்பிள்ளை அவர்களுக்கு தனலெட்சுமி. பத்மாவதி. சரோஜினி. மகேஸ்வரி ஆகிய நான்கு மகள்மாரும் பாலகிருஷ்ணன் என்ற ஒரு மகனும் இருந்தனர். திரு.மு.பாலகிருஷ்ணன் அவர்களும் அரசாங்க நில அளவையாளராகவே கடமையாற்றினார். திரு. இ. முருகுப் பிள்ளை அவர்களின் மகன் திரு. மு.பாலகிருஷ்ணன் அவர்களும், திரு. சிவசுப்ரமணியம் (பிரதி பொது முகாமையாளர். மகாவலி அபிவிருத்திச் சபை). திரு.நவரட்ணம் (நில அளவையாளர். ஆற்றுப் பள்ளத்தாக்குகள் அபிவிருத்திச் சபை) ஆகிய இரு மருமக்களும் திருக்கோணமலை இந்துக் கல்லூரியிலேயே கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வாழ்ந்த திரு.இ.முருகுப்பிள்ளை அவர்கள் 19.05.1976 இல் காலமானார்

திரு. தியாகராஜா வழக்கறிஞர்

திரு. வைத்திலிங்கம்

முகாமையாளர் சபையில் இடம் பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்ட மேற்குறித்த இருவரைப் பற்றியும் தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இவர்களுடைய குடும்ப உறவுகள். நண்பர்கள். வாழ்விடம் பற்றி அறிந்துகொள்வதற்கு முயற்சித்தபோதும் அது சாத்தியமாகவில்லை. வழக்கறிஞர் திரு.தியாகராஜா அவர்கள் குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் பருத்தித்துறை சென்று அங்கே வாழ்ந்தார் எனவும் நீதிமன்ற வழக்குகளுக்காக திருக்கோணமலைக்கு சில தடவைகள் வந்து சென்றுள்ளார் என்ற தகவல் மாத்திரமே கிடைத்தது.